"மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் விவாதிக்க தயாராக இல்லை" கனிமொழி பேச்சு!

"மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் விவாதிக்க தயாராக இல்லை" கனிமொழி பேச்சு!

மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விவாதிக்க தயாராக இல்லாதது தான் மிகப்பெரிய கொடுமை என கனிமொழி எம்பி வருத்தம் தொிவித்துள்ளாா்.

சென்னை ராயப்பேட்டையில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட கனிமொழி எம்பி, மணிப்பூர் விவகாரம் குறித்து பேசியுள்ளார். அப்பொழுது அவர் பேசியதாவது," மணிப்பூர் கலவரம் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. மணிப்பூர் கலவரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்துள்ளனர். அனைவரது மனசாட்சியும் அசைத்துப் பார்க்கக் கூடிய ஜீரணிக்க முடியாத அளவில் மிகவும் மோசமாக பெண்கள் கொடூரமாக நடத்தப்பட்டுள்ளனர். மணிப்பூர் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பிறகே பிரதமர் மோடி நாடாளுமன்றத்தின் வெளியில் மணிப்பூர் கலவரம் குறித்து வாய் திறந்துள்ளார். இச்சம்பவத்தின் மூலம் இந்நாட்டில் பெண்களுக்கும், மனிதர்களுக்கும் எந்த பாதுகாப்பு இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது" என கடுமையாக கண்டித்து பேசியுள்ளார்.
 
மேலும், அதிமுகவினர் முதலில் மணிப்பூர் சம்பவம் குறித்து பேசட்டும். மேலும் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக மணிப்பூரில் நடந்த கொடூரத்தில் மனிதர்களுக்கு நடந்த நியாயத்தை பற்றி பேச வேண்டும், எனவும் அதிமுகவை சாடியுள்ளார்.

மேலும், "நாடாளுமன்றத்தில் இது குறித்து மோடி பேச வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பாஜக பார்ப்பது போல் அனைத்தையும் தேர்தல் அரசியலாக மாற்றி விட முடியாது. மனிதர்களின் அடிப்படை வாழ்க்கை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படையான ஒன்று. அதன் அடிப்படையில் மணிப்பூர் கலவரம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி விவாதிக்க தயாராக இல்லை என்பது தான் ஜனநாயகத்தில் நடந்த மிகப்பெரிய கொடுமை" எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க || "சிறப்பாக பணியாற்றும் அமைச்சர்கள் மீது ஏதாவது வழக்கு போடுகிறார்கள்" மத்திய அரசை குற்றம் சாட்டிய அமைச்சர்!!