தொடர்ந்து மூன்றாவது முறை கர்நாடகம் முதலிடம்....

தொடர்ந்து மூன்றாவது முறை கர்நாடகம் முதலிடம்....

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்திய கண்டுபிடிப்பு(புதுமை) குறியீடு  மூன்றாவது பதிப்பில் முதல் மூன்று மாநிலங்களாக கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஹரியானா ஆகியவை இடம் பெற்றுள்ளன. 

இந்திய கண்டுபிடிப்பு(புதுமை) குறியீடு:

இந்திய கண்டுபிடிப்பு குறியீடு 2021,  புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. 

நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி பரமேஸ்வரன் ஐயர் முன்னிலையில் துணைத் தலைவர் சுமன் பெரி இன்று தேசிய புதுமை குறியீட்டை வெளியிட்டுள்ளார். இக்குறியீடு உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கர்நாடகா முதலிடம் பிடித்துள்ளது. இந்திய கண்டுபிடிப்பு(புதுமை) குறியீடு முதல் மற்றும் இரண்டாவது பதிப்புகள் முறையே அக்டோபர் 2019 மற்றும் ஜனவரி 2021 இல் வெளியிடப்பட்டன.

மதிப்பீட்டிற்கான அளவீடுகள்:

முதல் இரண்டு பதிப்புகளில்  36 அளவீடுகளின் அடிப்படையில் இந்திய கண்டுபிடிப்பு(புதுமை) குறியீடு மதிப்பிடப்பட்டது.  தற்போது அதனுடன் புதிதாக ​​66 அளவீடுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கண்டுபிடிப்பிற்கான செயல்திறனை அளவிடுவதற்கான மிகவும் நுணுக்கமான மற்றும் விரிவான கண்ணோட்டத்தை இது காட்டுகிறது.

மாநிலங்கள் வகைப்பாடு:

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறனை திறம்பட ஒப்பிடுவதற்காக அவை '17 முக்கிய மாநிலங்கள்', '10 வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்கள்' மற்றும் '9 யூனியன் பிரதேசங்கள் மற்றும் நகர மாநிலங்கள்' என பிரிக்கப்பட்டு புதுமை குறியீடு அளவிடப்பட்டுள்ளது.