சமூகத்தில் குழப்பங்களை ஏற்படுத்துவது தான் பாஜகவின் நோக்கம் –நிதிஷ் குமார்!

சமூகத்தில் குழப்பங்களை ஏற்படுத்துவது தான் பாஜகவின் நோக்கம் –நிதிஷ் குமார்!

பீகார் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியான பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி அரசு வெற்றி பெற்றது. சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியுடனான உறவை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார் பீகார் முதல்வராக எட்டாவது முறையாக பதவியேற்றார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு

ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், சிபிஐ(எம்எல்), சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) இவை தவிர, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய 'மகாத்பந்தன் கூட்டணி' 243ல் 160க்கும் அதிகமான பலத்தை பெற்றுள்ளது.

மொத்தம் 160 எம்எல்ஏக்கள் நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் ஒரே சட்டமன்ற உறுப்பினர் அக்தருல் இமானும் ஆளும் கூட்டணியில் இல்லை என்றாலும் நிதிஷ் குமார் அரசாங்கத்தை ஆதரித்து வாக்களித்தார்.

பாஜகவைச் சேர்ந்த சபாநாயகர் விஜய்குமார் சின்ஹாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தொடர்ந்து அவர் பதவி விலகிய நிலையில் சட்டப்மன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது.

பாஜக குழப்பங்களை உருவாக்குகிறது

பீகார் சட்டசபையில் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய நிதிஷ் குமார், பாரதிய ஜனதா கட்சி மீது கடுமையான தாக்கிப் பேச தொடங்கினார். பாஜக சமூகத்தில் குழப்பங்களை உருவாக்குகிறது என்று குற்றம் சாட்டினார்.

"நாங்கள்  பீகாரின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்பட உறுதிமொழி எடுத்துள்ளோம். நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் என்னை அழைத்து இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்தனர், மேலும் 2024 தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்" என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

இரண்டு முறை கூட்டணி முறிவு

எட்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக பாஜகவுடனான தனது கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் எல். கே. அத்வானி போன்ற தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கடந்த 2013 ஆம் ஆண்டு அக்கட்சியுடனான உறவை முறித்துக் கொண்டதாகக் கூறினார்.

"வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள் என்னை மரியாதையுடன் நடத்தினார்கள். அவர்கள் ஓரங்கட்டப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 2013 ஆம் ஆண்டு பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டேன்" என்று நிதிஷ் கூறினார்.

சமூகத்தில் இடையூறுகளை உருவாக்குவதே அவர்களின்(பாஜக) பணியாகும். பத்திரிகைகள் கூட சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்படவில்லை. மாற்றத்தை ஏற்படுத்த நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். இன்று டெல்லிக்கு வெளியே நடப்பதெல்லாம் விளம்பரம் தான் என்று பீகார் முதலமைச்சர் கூறினார்.

பீகாரில் தொடரும் சி.பி.ஐ சோதனை

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்த காலத்தில் நிலம் தொடர்பான வழக்கை முன்வைத்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர்கள் தொடர்புடைய 25 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.

பீகார் மாநிலம் குருகிராமில் தேஜஸ்வி யாதவ்குச் சொந்தமான நிறுவனத்தால் கட்டப்பட்டு வருவதாகக் கூறப்படும் வணிக வளாகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது. குருகிராமில் கட்டப்பட்டு வரும் ஒரு வணிக வளாகம், வைட்லேண்ட் என்ற நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகிறது, அதில் தேஜஸ்வி யாதவ் குடும்பத்திற்கும் பங்குள்ளதாக கூறப்படுகிறது.

சட்டமேலவை உறுப்பினர் சுனில் சிங் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ஃபாக் கரீம், ஃபயாஸ் அகமது மற்றும் முன்னாள் சட்டமேலவை உறுப்பினர் சுபோத் ராய் உட்பட ஆர்ஜேடியின் பல மூத்த தலைவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.