கேரளாவை நிதி ரீதியாக இந்திய அரசு நசுக்குகிறது…பினராயி விஜயன் குற்றம்சாட்டு!

கேரளாவை நிதி ரீதியாக இந்திய அரசு நசுக்குகிறது…பினராயி விஜயன் குற்றம்சாட்டு!

பாஜக தலைமையிலான மத்திய அரசு, மாநிலத்தை நிதி ரீதியாக ‘பிழிந்துஅதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு அழிக்க முயற்சிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை குற்றம்சாட்டினார்.மாநிலத்தின் வரையறுக்கப்பட்ட உரிமைகளைக் கூட குறைக்க முயற்சிப்பதாக இந்திய அரசை குற்றம் சாட்டிய அவர், தென் மாநிலங்களை அழிக்கும் நோக்கத்துடன் ஒரு விசித்திரமான "நிதி அழுத்தத்தை" அவர்கள் மீது சுமத்த முயற்சிக்கின்றனர் என்றார்.

நாட்டில் நிலவும் கூட்டாட்சிக் கொள்கைகளை மீறும் முயற்சிகளை இந்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார். எங்கள் மாநிலத்தின் தகுதியான வருவாய் மானியம் குறைக்கப்பட்டு அதன் கடன் வரம்பை குறைக்கும் முயற்சி நடந்து வருகிறது. நமது மாநிலத்தை ஆழமான நெருக்கடிக்குள் தள்ளவே இந்த முயற்சி,” என்றார்.

ஒன்றிய அரசின் அணுகுமுறை "எங்களால் எதையும் செய்ய முடியும், உங்களால் முடியாது" என்பதை போல உள்ளது என அவர் கூறினார். ஒன்றிய அரசு கூட்டுறவுத் துறையைக் கைப்பற்ற முயற்சிக்கிறது. பத்து லட்சம் பணியிடங்களை காலியாக வைத்திருப்பதன் மூலம், நாட்டின் வேலைவாய்ப்புத் துறையை அழிக்க இந்திய அரசு முயற்சிக்கிறது என்றும் அவர் கூறினார்.

நாட்டின் அரசியலமைப்பு அமைப்புகளை பலவீனப்படுத்தி, மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளையும் பினராயி விஜயன் எச்சரித்தார். மாநில அரசின் முதன்மை நிறுவனமான KIIFB-ன் நிதி பரிவர்த்தனைகளில் நடந்ததாகக் கூறப்படும் மீறல்கள் தொடர்பான விசாரணை தொடர்பாக முன்னாள் மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக்கிற்கு அமலாக்க துறை நோட்டீஸ் அனுப்பிய சில வாரங்களுக்குப் பிறகு, இந்திய அரசுக்கு எதிராக முதலமைச்சரின் கடுமையான  எதிர்ப்பு வந்துள்ளது.