அரசியல் எதிர்ப்பை விரோதமாக மாற்றக்கூடாது: தலைமை நீதிபதி என்வி ரமணா 

அரசியல் எதிர்ப்பை விரோதமாக மாற்றக்கூடாது: தலைமை நீதிபதி என்வி ரமணா 

அரசியல் எதிர்ப்பானது விரோதமாக மாறுவது ஆரோக்கியமான மக்களாட்சியின் அடையாளங்கள் அல்ல என்று இந்தியாவில் எதிர்க்கட்சி்ளின் வாதத்திற்கு பதிலளிக்கும் வகையில்  தலைமை நீதிபதி என்.வி. ரமணா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வலுவாக, துடிப்பாக செயல்படும்  எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் செயல்பாட்டை சரிசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

75 ஆண்டுகால நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற தலைப்பில் ராஜஸ்தான் சட்டப் பேரவையில் பேசிய தலைமை நீதிபதி ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கான அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, அரசியல் கடுமையானதாகிவிட்டது எனவும் கருத்து வேறுபாடுகள் அரசியலையும் சமூகத்தையும் வளப்படுத்துவதில்லை  எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசியல் எதிர்ப்பை விரோதமாக மாற்றக்கூடாது.  இதை இன்றைய காலக்கட்டத்தில் அதிகமாக காண்கிறோம்.  இவை ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அறிகுறிகள் அல்ல என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.  மேலும் ஒரு வலுவான, துடிப்பான மற்றும் சுறுசுறுப்பான எதிர்ப்பு, ஆட்சியை மேம்படுத்த உதவும் என்றும் அரசாங்கத்தின் செயல்பாட்டை சரிசெய்யும் என்றும் கூறியுள்ளார்.

ஒரு இலட்சிய சமூகத்தில், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்படுவதே முற்போக்கான ஜனநாயகத்திற்கு வழிவகுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, உறுதியான ஜனநாயகம் என்பது அனைத்து தரப்பின் கூட்டு முயற்சியேயாகும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

விரிவான ஆலோசனையின்றி சட்டங்கள் :

முன்னர் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறப்பான பங்கை  வகித்து வந்ததாகவும், அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே பரஸ்பர மரியாதை அதிகமாக இருந்ததாகவும் தலைமை நீதிபதி குறிப்பிட்டு கூறியுள்ளார்.  ஆனால் தற்போது துரதிர்ஷ்டவசமாக எதிர்க்கட்சிக்கான இடம் குறைந்து வருகிறது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

விரிவான விவாதம் மற்றும் ஆய்வு இல்லாமல் சட்டங்கள் இயற்றப்படுகிறது என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.  சட்டம் இயற்றுவது ஒரு சிக்கலான செயல் என்பதால், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சட்ட வல்லுநர்களின் உதவியைப் பெற வேண்டும்.  அதனால் அவர்கள் விவாதங்களில் அர்த்தமுள்ள வகையில் பங்களிக்க முடியும்.  எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவருக்கும் தகுதியான சட்ட வழக்கறிஞர்களின் உதவியை வழங்குவது குறித்து சபாநாயகர் பரிசீலிக்கலாம் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறையின் முக்கியப் பணிகளில் ஒன்று சட்டத்தை விளக்குவதும், இடைவெளியை நிரப்புவதும் ஆகும் என்று கூறிய தலைமை நீதிபதி, மக்கள் வாழ்வில் அரசின் தலையீடு அதிகரிப்பது, மற்ற இரண்டு பிரிவுகள் குறித்து பொதுமக்களிடையே அதிருப்தி மற்றும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது நீதித்துறை மீதான மக்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

விழாவில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா டிஜிட்டல் மியூசியத்தை திறந்து வைத்துள்ளார்.  இந்த அருங்காட்சியகம் ராஜஸ்தானின் அரசியல் மற்றும் வரலாற்று அம்சங்களுடன் வளமான கலாச்சாரத்தையும் காட்சிப்படுத்துகிறது.  இந்த அருங்காட்சியகம் ஒரு கட்டிடம் மட்டுமல்ல, நமது கடந்த காலத்திற்கும் நமது எதிர்காலத்திற்கும் இடையிலான பாலமாக உள்ளது என்றார். இந்த அருங்காட்சியகம் இளைஞர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்றும் தலைமை நீதிபதி பேசியுள்ளார்.