உத்தவ் தாக்கரேவிற்கு சவால் விட்ட ஷிண்டே:

உத்தவ் தாக்கரேவிற்கு சவால் விட்ட ஷிண்டே:

மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பமாக சிவசேனா கூட்டணியை ஆட்சிக்கட்டிலிருந்து இறக்கிக் காட்டிய ஏக்நாத் ஷிண்டே தற்போது உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக புதிய சவாலைவிடுத்துள்ளார். மகாராஷ்டிரா அரசியல் சூழலில், சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியை உடைத்து, பாஜக துணையுடன் ஆட்சியை நிறுவியர் ஏக்நாத் ஷிண்டே. சிவசேனாவிற்குள் இருந்து கொண்டே கட்சியை உடைத்ததுடன், ஆதர்வு எம்.எல்.ஏக்கள் உதவியுடன் ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தினார். அதாவது, நம்பிக்கை வாக்கெடுப்பில், ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவாளர்கள் உத்தவ் தாக்கரே அணிக்கு மாறுவார்கள் என்று எதிர் பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்பவே, உத்தவ்தாக்கரேவும், அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்தார். இருப்பினும், நம்பிக்கை வாக்கெடுப்பில், 164 வாக்குகள் பெற்று தனது அரசாங்கத்தின் பெரும்பான்மையை நிரூபித்து, மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அத்துடன், இனி சிவசேனாவின் தலைவரும் தான் தான் என பிரகடனப்படுத்தினார்.  

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய ஷிண்டே: 

குடும்ப அரசியலை மகாராஷ்டிராவில் அனுமதிக்க மாட்டோம் என்றுகூறிதான் ஏக்நாத் ஷிண்டே முதலில் சவாலை முன்வைத்தார். அதற்கு ஏற்பவே, சிவசேனாவின் 50 எம்எல்ஏக்களில் 40க்கும் மேற்பட்டவர்கள் தனது ஆதரவு எம்.எல். ஏக்கள் என்றும் அறிவித்தார். 10 சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் யாரேனும் ஒருவரும் வலுக்கட்டாயமாக கூட்டணியில் இல்லை என்று குறிப்பிட்டு கூறிய அவர் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இந்துத்துவா மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதாக கூறி, உத்தவ் தாக்கரேவிற்கு அதிர்ச்சி அளித்தார்.  

ஷிண்டே தோல்வி அடைவார்; ஆதித்ய தாக்ரே சவால்!

மகாராஷ்டிரா அரசியலில் பால் தாக்கரேவின் பலம் இந்தியாவே அறிந்தது. அவரது மகனின் ஆட்சியைக் கலைத்துவிட்டு, புதிய ஆட்சியை நிறுவிய ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவாளர்கள் இனி வரும் தேர்தல்களில் வெற்றி பெற முடியாது என உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் கூறி வந்தனர். உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவும், இதனை உறுதி செய்யும் வகையில், யாரிடமும் அனுதாபத்தை நாங்கள் கேட்கவில்லை. அடுத்த தேர்தலில் சிவசேனா வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் எனக் கூறினார்.

ஷிண்டேவின் பதில் சவால்: 

இந்த அரசியல் பின்னணியில் தான், ஏக்நாத் ஷிண்டேவின் சவால் முக்கியமாக கவனம் பெறுகிறது. அதாவது, ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவாளர்கள் இனி வரும் தேர்தல்களில் வெற்றி பெற மாட்டார்கள், அவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆதரவாளர்கள் கூறுவருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இனி வரும் தேர்தல்களில், தானோ தனது ஆதரவாளர்களோ தோல்வி அடைந்தால், அரசியலைவிட்டே வெளியேறி விடுவேன் என கூறியுள்ளார். உத்தவ் தாக்கரேவை ஆட்சியில் இருந்து நீக்கி முதல் சவாலை நிறைவேற்றிக்காட்டிய ஏக்நாத் ஷிண்டே, தோல்வி அடைந்தால், அரசியலை விட்டே ஒதுங்கிவிடுவேன் என்ற அடுத்த சவாலை எப்படி நிறைவேற்றப்போகிறார் என்பதை அடுத்த தேர்தலில் தெரியவந்துவிடும்.