குடியரசு த்லைவர் தேர்தலில் ஏன் வாக்குசீட்டு?

குடியரசு த்லைவர் தேர்தலில் ஏன் வாக்குசீட்டு?

2004 முதல் 4 மக்களவைத் தேர்தல்களிலும், 127 சட்டமன்றத் தேர்தல்களிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணை தலைவர், மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற மேலவை  உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்களில் ஏன் பயன்படுத்தப்படவில்லை என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

இந்தியாவில் தேர்தல் வரலாறு:

சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் ஓட்டுச் சீட்டு முறையிலேயே, தேர்தல் நடைமுறைகள் நடத்தப்பட்டு வந்தன. பின்பு தொழிற்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன் பட்டுக்கு வந்தன. இந்திய தேர்தலில் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்துவதில் எற்படும் சிக்கல்களையும் கால விரயம், பண விரயம் ஆகியவற்றைத் குறைக்கவும், நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கையாகவும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. 

மின்னணு வாக்கு இயந்திரம்:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் நடைபெறும் நேரடி தேர்தல்களில் வாக்குகளை பதிவிடும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.  வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு எதிரே இருக்கும் பொத்தானை அழுத்தி வாக்களிக்கின்றனர். அதிகபட்ச வாக்குகளைப் பெற்றவர் தேர்தலில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்படுவர். 

ஓட்டுப்பதிவின் போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், அதற்கு பதில் புதிய இயந்திரத்தை அப்பகுதிக்கான மண்டல அதிகாரி பொருத்துவார். பழுதான இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் அதன் 'மெமரி'யில் அப்படியே இருக்கும் என்பதால், முதலில் இருந்து ஓட்டுப்பதிவை நடத்த வேண்டியதில்லை. இந்த இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு ஐந்து ஓட்டுகளுக்கு மேல் பதிவு செய்யாது. யாராவது ஓட்டுச் சாவடியை கைப்பற்ற முயன்றால், தலைமை அலுவலர் 'முடிவு' பொத்தானை அழுத்தி ஓட்டுப்பதிவை நிறுத்திவிட முடியும். 

மின்னணு வாக்கு இயந்திரம் பயன்பாடு:

1979 ஆம் ஆண்டில் ஒரு முன்மாதிரி உருவாக்கப்பட்டது, இது தேர்தல் ஆணையத்தால் ஆகஸ்ட் 6, 1980 அன்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நிரூபிக்கப்பட்டது.  வாக்கு இயந்திரம் முதன்முதலில் கேரளாவில் 1982 ஆம் ஆண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டன.  தேர்தலில் முறைகேடு சர்ச்சை எழுந்ததால் அந்தத் தேர்தலை உச்ச நீதிமன்றம் நிறுத்தியது.

அதைத் தொடர்ந்து, 1989 ஆம் ஆண்டில், தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான விதியை உருவாக்குவதற்காக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இல் நாடாளுமன்றம் திருத்தம் செய்தது.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 2001 மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

அதன்பிறகு, ஒவ்வொரு மாநில சட்டசபை தேர்தலுக்கும், கமிஷன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் பயன்படுத்தியது.

2004 மக்களவைத் தேர்தலில், நாட்டின் 543 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பத்து லட்சத்துக்கும் அதிகமான மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

மின்னணு வாக்கு இயந்திரம் சர்ச்சை:

இந்தியாவில் சில அரசியல் கட்சிகள் இம்முறையை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளன. அதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து வருகின்றது. முறைகேடுகளுக்கு வழிவகுப்பதை நிருபிக்கும் நிலையில் அதை சரி செய்ய தயாராக இருக்கிறது என்று அறிவித்துள்ளது. எந்த அரசியல் கட்சியும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்யமுடியும் என்று நிருபிக்கவில்லை.

குடியரசு தேர்தல்:

குடியரசு தேர்தல்  மறைமுக ஒற்றை மாற்று விகிதாச்சார முறையின்படி நடத்தப்படுகிறது. குடியரசுத் தலைவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களால் மறைமுக தேர்தல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.  வாக்காளர்களுக்கு வாக்குசீட்டு வழங்கப்படுகிறது. 

போட்டியிடும் வேட்பாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருப்பதால், ஒவ்வொரு வாக்காளரும் பல விருப்பங்களைக் குறிக்கலாம்.  பல சுற்றுகளுக்கு பிறகு குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

ஏன் வாக்குசீட்டு முறை?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,குடியரசு தேர்தல் நடைமுறைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படவில்லை. மின்னணு வாக்கு இயந்திரம் என்பது வாக்குகளின் தொகுப்பாகும். விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ், விருப்பத்தின் அடிப்படையில் வாக்குகளை கணக்கிட வேண்டும்.  அதற்கு முற்றிலும் வேறுபட்ட தொழில்நுட்பம் உடைய இயந்திரம் வடிவமைக்கப்பட வேண்டும்.

மின்னணு வாக்கு இயந்திரம் பயன்பாடு அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்தப்படுவதால் பழமை முறையை பின்பற்ற வேண்டி வாக்குசீட்டு முறை குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் தேர்தல் முறையிலும் பின்பற்றப்படுகிறது என்ற கருத்தும் நிலவுகிறது.