உலகின் பழமையான மொழி தமிழ் மொழிதான் -மோடி...!!

உலகின் பழமையான மொழி தமிழ் மொழிதான் -மோடி...!!


உலகின் பழமையான மொழி தமிழ் மொழிதான்என்று பிரதமர் நரேந்திர மோடி தமிழ் புத்தாண்டு விழாவில் தெரிவித்துள்ளார்  

உலகமெங்கும் உள்ள தமிழா்களால் தமிழ் புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் இல்லத்தில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் பிரதமா் மோடி பங்கேற்று தமிழ் புத்தாண்டு குறித்து சிறப்புரையாற்றியுள்ளாா். 

அப்போது அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என கூறி தனது பேச்சை தொடங்கிய பிரதமா் மோடி, உலகின் பழமையான மொழி தமிழ் மொழிதான் என்று புகழ்ந்தார். மேலும், ஒவ்வொரு இந்தியனும் தமிழ் மொழி குறித்து பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். சென்னையிலிருந்து கலிபோர்னியா வரை, மதுரையில் இருந்து மெல்போர்ன் வரை, கோயம்புத்தூரில் இருந்து கேப் டவுன் வரை, சேலத்தில் இருந்து சிங்கப்பூர் வரை, தங்கள் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை தம்முடன் சுமந்து சென்ற தமிழ் மக்களைக் காணலாம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழர்களின் விழாவான பொங்கலையும், புத்தாண்டையும் உலகமே கொண்டாடுவதாக தெரிவித்தார். தமது மன்கி பாத் நிகழ்ச்சியில் சாதனைத் தமிழர்களைப் பலமுறை குறிப்பிட்டு வாழ்த்தி உள்ளதாகவும் பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். மேலும் தமிழ் இலக்கியமும் அதிகமாக மதிக்கப்படுவதாகவும், தமிழா்களின் பண்பு குறித்து தமிழ்த் திரையுலகம் நமக்குச் சின்னச் சின்னப் படைப்புகளை வழங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா். 

இந்த விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தெலங்கானா ஆளுநா் தமிழிசை சவுந்தராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.