யூரோகோப்பை கால்பந்து தொடர்: இறுதி போட்டிக்கு முன்னேறியது இத்தாலி அணி...

யூரோகோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி, இத்தாலி அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

யூரோகோப்பை கால்பந்து தொடர்: இறுதி போட்டிக்கு முன்னேறியது இத்தாலி அணி...

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், இன்று அதிகாலை இங்கிலாந்தின் வெம்ப்ளி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இத்தாலி மற்றும் ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் சமபலம் பொருந்திய இரு அணி வீரர்களும் வரிந்துகட்டிக் கொண்டு நின்றதால், ஆட்டத்தில் அனல் பறந்தது. எனினும் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் ஒரு கோல் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதியில் 60ஆவது நிமிடத்தில் இத்தாலி அணியின் பெடரிகோ சீஸா கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். ஸ்பெயின் அணியில் மாற்று வீரராக களமிறங்கிய அல்வாரோ மொராட்டா 80ஆவது நிமிடத்தில் பதில் கோல் அடித்து அசத்தினார். அதன்பிறகு இரு அணி வீரர்களும் கோலேதும் அடிக்காத நிலையில், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

கூடுதல் நேரத்தின் 110ஆவது நிமிடத்தில் இத்தாலியின் பெரார்டி கோல் அடித்த போதும், அது ஆப்சைட் என அறிவிக்கப்பட, போட்டி பெனால்டி சூட் அவுட் முறைக்கு சென்றது. இதில் இத்தாலி அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.