ஓய்வுபெறும் வரை பெங்களூர் அணிக்காக விளையாடுவேன் – தோல்விக்கு பின் விராட் கோலி பேச்சு  

ஐ.பி.எல். தொடரின் வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பெங்களூரு அணி, ஏமாற்றத்துடன் தொடரை விட்டு வெளியேறியது.

ஓய்வுபெறும் வரை பெங்களூர் அணிக்காக விளையாடுவேன் – தோல்விக்கு பின் விராட் கோலி பேச்சு   

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் வெளியேற்றுதல் சுற்று, சார்ஜாவில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான படிக்கல், கோலி ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடினர். ஆனால், அவர்களுக்கு பின் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள், கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் சரிய தொடங்கியதால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது.

139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. சுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர் ஆகிய இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தாலும், பெங்களூரு அணி பந்துவீச்சாளர்கள் அதிக ரன்கள் விட்டுக் கொடுக்கவில்லை. முக்கியமான கட்டங்களில் கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. இருப்பினும், சுனில் நரைன் அதிரடியாக ஆடி, கொல்கத்தா அணியின் வெற்றியை உறுதி செய்தார். கடைசி ஓவரில் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில், கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நாளை சார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இதனிடையே தோல்விக்கு பின் பேசிய பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி ஒவ்வொரு போட்டியின் போதும், வெற்றிக்காக 120 சதவீதம் உழைத்ததாகத் தெரிவித்தார். மேலும் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறும் வரை பெங்களூரு அணிக்காகவே விளையாட உள்ளதாகவும் உருக்கத்துடன் கூறினார்.