டி20 உலகக்கோப்பை: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

ஸ்காட்லாந்துக்கு எதிரான 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பை: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாயில் நடைபெற்ற 37-வது ஆட்டத்தில், இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல்  தடுமாறியது. இந்திய அணியின் துல்லிய பந்து வீச்சு காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த ஸ்காட்லாந்து அணி, 17 புள்ளி 4 ஓவர்களில் ஆட்டமிழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து 86  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த இந்திய அணி, தொடக்கம் முதலே ஸ்காட்லாந்து பந்து வீச்சை புரட்டியெடுத்தது. குறிப்பாக கே.எல் ராகுல் ஆட்டத்தில் அனல் பறக்க, அவரது பேட்டில் பட்ட பந்துகள் அனைத்தும் சிக்சருக்கும் பவுண்டரிகளுக்கும் சென்றன. இதனால் 6 புள்ளி 3 ஓவர்களில் 89 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை தாண்டிய இந்திய அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை ருசித்தது.