ஒலிம்பிக்: இந்திய ஆடவர் ஹாக்கி அணி அதிர்ச்சி தோல்வி!

ஒலிம்பிக் போட்டியில் 49 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதிக்கு தகுதி பெற்றும், இந்திய ஆடவர் ஹாக்கி அணி இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்ததால்,  ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 

ஒலிம்பிக்: இந்திய ஆடவர் ஹாக்கி அணி அதிர்ச்சி தோல்வி!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவருக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 49 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதியில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றது. இன்றைய ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை எதிர்த்து இந்தியா எதிர்கொண்டது. போட்டியின் துவக்கத்தில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில், பெல்ஜியம் தொடர்ச்சியாக முன்னேறி அடுத்தடுத்து கோல் மழைகளை பொழிந்தது. இதனால் முதல் இரு சுற்றுகளில் இரு அணிகளும் சமபலத்தில் இருந்தன.  இதனால் ஆட்டம் டிராவில் முடியக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் கடைசி 10 நிமிடத்தில் பெல்ஜியம் அடுத்தடுத்து கோல்களை விளாசியது. இதனால் போட்டி முடிவில் 5க்கு 2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது. 

இந்தநிலையில் தோல்வியை தழுவிய இந்திய அணி வெண்கலப்பதக்கத்தை பெறுவதற்கான போட்டியில் இன்று ஆட உள்ளது. ஆண்கள் ஹாக்கி அணியில் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் களம் காண உள்ள நிலையில் இதில் தோல்வி அடையும் அணியுடன் விளையாடி வெற்றிப்பெற்றால் இந்திய அணிக்கு வெண்கலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஆடவர் ஹாக்கி அணியின் ஆட்டத்தை பிரதமர் மோடி தனது இல்லத்தில் இருந்தபடி தொலைக்காட்சியில் கண்டுகளித்தார். போட்டியின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்றும், இந்திய அணி தனது முழு திறனையும் வெளிப்படுத்தி விளையாடியதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.