ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு தலைவர்கள் வாழ்த்து

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு தலைவர்கள் வாழ்த்து
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில், நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றது ஈட்டி எறிதலில் தடைகளை தகர்த்ததுடன், புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். நீரஜ் சோப்ராவின் சாதனை இந்திய இளைஞர்களுக்கு ஊக்கத்தை அளிப்பதாக தெரிவித்த அவர், இதயப் பூர்வமாக வாழ்த்து தெரிவிப்பதாக கூறினார்.
 
பிரதமர் மோடி தெரிவித்த வாழ்த்துச் செய்தியில், டோக்கியோவில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நீரஜ் சோப்ராவின் சாதனை எப்போதும் நினைவுகூரப்படும் எனத் தெரிவித்த அவர், தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறினார், மேலும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
 
இதேபோல் தமிழ்நாடு ஆளுநர் பன்வார் லால் புரோகித், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும்  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு அவரின் சொந்த மாநிலமான ஹரியான மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார்  6 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அவருக்கு 50 சதவீத சலுகை விலையில் வீடு வழங்கப்படும் எனத் தெரிவித்த அவர், பஞ்குலாவில் அமையவுள்ள தடகள வீரர்களுக்கான பயிற்சி மையத்திற்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்