20ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வாரா ஜோகோவிச்..? 

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர் மற்றும் நடால் ஆகியோரின் சாதனையை சமன் செய்வாரா? என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

20ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வாரா ஜோகோவிச்..? 
லண்டனில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி போட்டிகள் நடந்தன. இதில் உலகின் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை எதிர்கொண்டார்.
 
போட்டியில் 22 வயது இளம் வீரரான ஷபோலோவ், ஜோகோவிச்சுக்கு ஈடுகொடுத்து ஆடியதால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இறுதியில், 7-6, 7-5, 7-5 என்ற நேர்செட் கணக்கில் ஷபோவலோவை விரட்டி, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார், ஜோகோவிச்.
 
முன்னதாக நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில், போட்டித் தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினியும், 14ஆவது இடத்தில் உள்ள போலந்தின் ஹூபர்ட் ஹர்காசும் மோதினர். இந்த போட்டியில் முதல் இரண்டு செட்டுகளை 6-3, 6-0 என பெரெட்டினி எளிதில் கைப்பற்ற, மூன்றாவது செட்டை 7-6 என ஹர்காஸ் வென்றார். கடைசி செட்டை 6-4 எனக் கைப்பற்றிய பெரெட்டினி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
 
நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில், நோவாக் ஜோகோவிச்சும், மேட்டியோ பெரெட்டினியும் பல்ப்பரீட்சை நடத்த உள்ளனர். இதுவரை 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச், விம்பிள்டன் பட்டத்தையும் வென்று, ரோஜர் பெடரர் மற்றும் ரஃபேல் நடால் ஆகியோரின் 20 கிராண்ட்ஸ்லாம் சாதனையை சமன் செய்வாரா? என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.