கோலாகலமாக தொடங்கிய விம்பிள்டன் டென்னிஸ்...அசத்தல் வெற்றி பெற்ற ஜோகோவிச்...!

கோலாகலமாக தொடங்கிய விம்பிள்டன் டென்னிஸ்...அசத்தல் வெற்றி பெற்ற ஜோகோவிச்...!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஸ்வியாடெக் மற்றும் ஜோகோவிச் வெற்றி பெற்று அசத்தியுள்ளனா்.

’கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளில் ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் புர்செல்லை விரட்டியடித்தார். இத்தாலி வீரா் லாரென்ஜோ முசெட்டி தன்னை எதிர்த்த பெரு வீரா் பாப்லோ வரில்லாசை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 

மற்றொரு ஆட்டத்தில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான செர்பியாவை சோ்ந்த நோவக் ஜோகோவிச் 6 க்கு 3, 6 க்கு 3, 7 க்கு 6, 7 க்கு 3 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் பெட்ரோ சாசினை விரட்டியடித்தார். 

பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் போலந்தை சோ்ந்த இகா ஸ்வியாடெக் சீனாவின் லின் ஜூவுடன் மோதினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் முதல் செட்டை கைப்பற்றி 2-வது செட்டில் ஆடிய போது மழை குறுக்கிட்டது. இதனால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் ஸ்வியாடெக், ஜூவை சாய்த்து 2-வது சுற்றை எட்டினார். அமெரிக்காவை சோ்ந்த ஜெசிகா பெகுலா சக நாட்டவரான லாரன் டேவிசை சாய்த்தார். 

இதையும் படிக்க : ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு...தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி...!

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை பெலாரசை சோ்ந்த விக்டோரியா அஸரென்கா 6 க்கு 4, 5 க்கு 7, 6 க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சீனாவின் யு யுவானை வெளியேற்றினார். அர்ஜென்டினாவை சோ்ந்த போடோரோஸ்கா, குரோஷியாவை சோ்ந்த பெட்ரா மார்டிச், செக்குடியரசை சோ்ந்த பார்போரா ஸ்டிரிகோவா உள்ளிட்டோரும் முதல் சுற்றில் வெற்றி கண்டனர். 

இதற்கிடையே, மணிக்கட்டு காயம் காரணமாக ஆஸ்திரேலிய முன்னணி வீரர் நிக் கிரியாஸ், விம்பிள்டன் டென்னிசில் இருந்து விலகியுள்ளார்.