ப்பா,.. என்னா மேட்ச்.! 55 வருட பகையை முடிவுக்கு கொண்டுவந்த இங்கிலாந்து,.கண்ணீர் விட்ட ஜெர்மன் ரசிகர்கள்,.! 

ப்பா,.. என்னா மேட்ச்.! 55 வருட பகையை முடிவுக்கு கொண்டுவந்த இங்கிலாந்து,.கண்ணீர் விட்ட ஜெர்மன் ரசிகர்கள்,.! 

ஒவ்வொரு நாளும் பல எதிர்பாராத ட்விஸ்டுகளோடு  என்னா மேட்ச் பா! என்று சொல்லும் அளவு விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது யூரோ கோப்பை.  இரண்டு நாட்களுக்கு முன்பு போர்த்துக்கல், பிரான்ஸ், ஜெர்மனி எல்லாம் கால் இறுதிக்கு கூட முன்னேறாது என்று யாரும் சொல்லியிருந்தால்  அவனை கால் பந்து ரசிகர்கள் கல்லை கொண்டே எறிந்திருப்பார்கள். காரணம் இந்த அணிகள் அத்தனை வலுவாக இருந்தது. இதில் பிரான்ஸ் நடப்பு உலக சாம்பியன். போர்த்துக்கல் நடப்பு ஐரோப்பிய சாம்பியன், ஜெர்மனி 2014 ம் ஆண்டில் உலக சாம்பியன். ஆனால் இந்த மூன்று ஜாம்பவான் அணிகளும் தற்போது வெளியேறியிருக்கின்றன. 

ஒவ்வொரு முக்கிய தொடர்களிலும் 'குரூப் ஆப் டெத்' என்று ஒரு பிரிவு இருக்கும். அதாவது இரண்டு அணிகள் தான் நேரடியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலைமை இருக்கும் போது அந்த பிரிவில் மட்டும் அதற்கும் மேற்பட்ட அணிகள் வலுவாக இருக்கும். இந்த யூரோ கோப்பையில் மேற்கூறிய மூன்று அணிகளும் ஒரே பிரிவில் இருந்தன. அதில் ஜெர்மனி,பிரான்ஸ் அணிகள் நேரடியாக அடுத்த சுற்றுக்கு முன்னேற, போர்த்துக்கல் அணி சிறந்த மூன்றாம் அணி என்ற அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 

இதில் போர்த்துக்கல் அணி உலகின் நம்பர் ஒன் அணியான பெல்ஜியத்திடம் வீழ, பிரான்ஸ் அணி ஸ்விட்சர்லாந்து அணியிடம் வீழ்ந்தது. ஒப்பீடு அளவில் கூட ஸ்விட்சர்லாந்து அணியையெல்லாம் பிரான்ஸ்ஸோடு ஒப்பிட முடியாது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் உலக சாம்பியனை வீட்டுக்கு அனுப்பி வைத்தது ஸ்விட்சர்லாந்து. 

அடுத்ததாக அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனி-இங்கிலாந்து மோதல் நேற்று தொடங்கியது. சம பலம் வாய்ந்த என்று சொல்வார்கள் அல்லவா? அதற்கு சரியான உதாரணம் நாங்கள் தான்! என்று சொல்லும் அளவு பலம் வாய்ந்ததாக இருந்தது ஜெர்மனி, இங்கிலாந்து அணிகள். எப்படி இந்தியா ஒரே நேரத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு கிரிக்கெட் அணிகளை அனுப்புகிறதோ அதேபோல உலகின் எந்த இடத்துக்கும் ஒரே நேரத்தில் பலம் வாய்ந்த இரண்டு அணிகளை அனுப்பி வைக்கும் அளவு திறமையான வீரர்களை இந்த இரண்டு நாடுகளும் கொண்டுள்ளன. 

லண்டனின் லிம்ப்ளே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பாதி ஆட்டம் அத்தனை சுவாரசியமாக எல்லாம் இல்லை.பெல்ஜியம்-போர்த்துக்கல் , ஸ்பெயின்- குரேசியா, பிரான்ஸ்-ஸ்விட்சர்லாந்து போட்டிகளை பார்த்தவர்கள் இதை உணர்ந்திருக்ககூடும். முதல் பாதியில் இரண்டு அணிகளும் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியதால் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதியில் ஜெர்மனி அணி தான் சில வாய்ப்புகளை உருவாக்கியது. அதோடு இங்கிலாந்து கோல் போஸ்ட்டையும் அவ்வவ்போது முற்றுகையிட்டது. 

ஆனால் முதல் பாதியை விட இரண்டாம் பாதி ஆட்டம் களைகட்டியது. முதல் பாதியில் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்த இங்கிலாந்தின் ஹரி கேன் இரண்டாம் பாதியில் தான் தென்பட்டார். 60வது நிமிடத்தில் கிடைத்த கடின வாய்ப்பை வீணாக்கிய அவர் அதன் தொடர்சியாக அவ்வவ்போது ஜெர்மனி கோல் போஸ்டை நோக்கி முன்னேற அதற்கு பலனும் கிடைத்தது. ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் இங்கிலாந்து முன்கள வீரர் ரஹீம் ஸ்டெர்லிங், அருமையாக ஜெர்மனியின் நடுகள வீரர்களை தாண்டி பந்தை  ஹரி கேனிடம் கொடுக்க அதை அவர் இடது விங்கில் இருந்த ஷாவிடம் கொடுத்தார். அந்த பந்தை இடது விங்கில் இருந்து கோல் போஸ்டை நோக்கி அடிக்க அதை அழகாக கோலாக்கினார் ரஹீம் ஸ்டெர்லிங். இந்த கோலால் விம்ப்ளே ஸ்டேடியமே சில நிமிடங்கள் அதிர்ந்து பின் அடங்கியது. 

ஹீரோவான சிலர் அடுத்த சில நிமிடங்களிளேயே ஸிரோ ஆவார்கள். அந்த நிலை இங்கிலாந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங்குக்கும் வந்திருக்கும். கோல் அடித்து சில நிமிடங்களிலேயே தன்னிடம் வந்த பந்தை தன் பின்கள வீரருக்கே திருப்பி அனுப்ப முயன்றார் ரஹீம் ஸ்டெர்லிங். ஆனால் அந்த பந்து ஜெர்மனியின் முன்கள வீரர் தாமஸ் முல்லரிடம் சென்றது. அந்த பந்தோடு அவர் கோல் போஸ்ட் நோக்கி முன்னேற அதை தடுக்க வந்த கோல் கீப்பரை தாண்டி முல்லர் அடிக்க முயல, மிக சிறிய இடைவெளியில் அது கோல் போஸ்க்கு வெளியே சென்றது. தாமஸ் முல்லர் ஸ்டேடியத்திலேயே கதற, இங்கிலாந்து ரசிகர்கள் சில நொடிகளுக்கு பின் மூச்சி விட்டார்கள். 

அதன்பின் பதில்கோலடிக்க ஜெர்மனி வீரர்கள் இங்கிலாந்து கோல் போஸ்டை முற்றுகையிட, இங்கிலாந்து தடுப்பை தாண்டி எந்த ஜெர்மனி வீரர்களாலும் முன்னேற முடியவில்லை. இந்த முயற்சியில் ஜெர்மனியின் பின்கள வீரர்கள் முன்னேறி வர, அதைப் பயன்படுத்தி தனது இரண்டாம் கோலை அடித்தது இங்கிலாந்து. ஆட்டத்தின் 86வது நிமிடத்தில் முதல் கோல் போலவே இடது விங்கிலிருந்து க்ரியாலிஸ் கொடுத்த பந்தை தலையால் முட்டி கோலாக்கினார்  ஹரி கேன். வெற்றி உறுதியான நிலையில் இங்கிலாந்து ரசிகர்கள் ஆர்ப்பரிக்க, சோகத்தில் கண்ணீர் விடத் தொடங்கினார்கள் ஜெர்மனி ரசிகர்கள். 

அதன்பின் ஜெர்மனி வீரர்கள் எத்தனை முயன்றும் அவர்களால் இங்கிலாந்து தடுப்பை உடைக்கமுடியவில்லை. அதனால் தூரத்திலிருந்து லாங் பாஸ் மட்டுமே இறுதிவரை செய்ய ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. அந்த நிமிடத்தில் இங்கிலாந்து அணி கோப்பையையே வென்றது போல கோசமிட்டார்கள் இங்கிலாந்து ரசிகர்கள். 

அந்த மகிழ்ச்சியில் ஒரு காரணமும் இருந்தது. 1966ம் ஆண்டுக்கு பின் நாக் அவுட் போட்டிகளில் இங்கிலாந்து அணி ஜெர்மனியை வீழ்த்தியதே இல்லை. கிட்டத்தட்ட 55 ஆண்டுகளுக்கு பின் பெற்ற வெற்றி இங்கிலாந்து  ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தது. மிகப் பெரிய தலைகள் வெளியேறிய நிலையில் இங்கிலாந்துக்கு தற்போது கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது. என்ன தான் நாம் சொன்னாலும் இது கால்பந்து இங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.