அதிநவீன தொழில்நுட்பங்களுடன் புத்துணர்வு பெற்றுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானம்!!

அதிநவீன தொழில்நுட்பங்களுடன் புத்துணர்வு பெற்றுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானம்!!

சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஹாக்கி சாம்பியன்ஷிப் ஆடவர் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அதிநவீன தொழில்நுட்பங்களுடன் மைதானம் அட்டகாசமாய் புத்துணர்வு பெற்று இருக்கிறது. 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி இந்தியா உடன் இணைந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2023-ஆம் ஆண்டிற்கான ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை சென்னையில் நடத்த இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை  சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட ஆறு அணிகள் கலந்து கொள்ள உள்ளதால் , விளையாட்டு மைதானத்தை புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது 

குறிப்பாக மைதானத்தில் ரசிகர்கள், சிறப்பு விருந்தினர்கள் என அமர்ந்து பார்க்க தனித்தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மைதானத்தில் இருந்த பழைய மேட்டை எடுத்துவிட்டு  ஜிடி பாலிட்டான் என்கிற புதிய ரக மேட்டை அமைத்துள்ளனர். இந்த மேடானது
வருகிற 2024 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு பயன்படுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. 

7 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த மேட்டை, விமானம் மூலம் ஜெர்மனியில் இருந்து  முதன் முறையாக இந்தியா கொண்டு வந்து, ஆஸ்திரேலியாவை சேர்ந்த பணியாளர்கள் மூலம் மைதானத்தில் அமைத்துள்ளனர். மேலும்  இதே மைதானத்தில் பயிற்சி எடுப்பதற்கென,  இந்த மேட்டை பயன்படுத்தி ஒரு சிறிய மைதானம் அமைத்துள்ளனர்

பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கும் தமிழ்நாட்டு வீரர்கள், இந்த மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டால், நல்ல பலன் அளிக்கும் என்றும், இனிமேல் ஏராளமான சர்வதேச விளையாட்டு போட்டிகள்  இங்கு நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கருதுகின்றனர்.

மற்ற மேட்டை பொருத்தவரை ஒரு போட்டிக்கு 35 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த புதிய வகை ஜிடி பாலிட்டான் மேட்டை பொறுத்தவரை ஒரு போட்டிக்கு பத்தாயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தினால் மட்டுமே போதும் எனவும், இதனால் தண்ணீர் அதிக அளவில் சேமிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். 

புத்துயிர் பெற்ற இந்த மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்று திறந்து வைக்கப்பட்டு, அதில் ஒரு கேலரிக்கு கலைஞர் நூற்றாண்டு பெவிலியன் என பெயர் சூட்டும் விழாவும் நடைபெறுகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை ஹாக்கிக்கு பெயர் பெற்ற மைதானமாக ஒடிசா மைதானம் இருந்து வருகின்ற நிலையில்,அதேபோல் தற்போது எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானம் காட்சியளிப்பது சர்வதேச வீரர்களிடம் பெரிதும் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிக்க || பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்!!