வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 கோயில் சிலைகள் சென்னை வந்தன!!

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 10 கோயில் சிலைகள் சென்னை ரயில் நிலையம் வந்தடைந்தன.

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 கோயில் சிலைகள் சென்னை வந்தன!!

கடந்த காலங்களில் தமிழக கோயில்களிலிருந்து விலை மதிப்பற்ற சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு அங்குள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் கலைப்பொருள் வியாபாரிகளுக்கும் சட்டத்திற்கு புறம்பாக விற்கப்பட்டன. அத்தகைய சிலைகள் அங்குள்ள அருங்காட்சியகங்களிலும் கலைப் பொருள் சேகரிப்பாளர்களிடமும் உள்ளன.

அதன்படி தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்ட 10 உலோக மற்றும் கற்சிலைகள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகங்களில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டன. துவாரபாலகர், நடராஜர், கங்கலமூர்த்தி கடயம், நாடிகேஸ்வர கடயம், நான்கு கைகளைக் கொண்ட விஷ்ணு, ஸ்ரீதேவி, சிவன் மற்றும் பார்வதி சிலைகள், குழந்தைப் பருவ சம்பந்தர், நின்ற கோலத்தில் குழந்தை பருவ சம்பந்தர் ஆகிய சிலைகள் மத்திய கலை கலாச்சாரம் துறை உதவியுடன் மீட்கப்பட்டு நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபுவிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில் பத்து சிலைகளும் தமிழ்நாடு விரைவு ரயில் மூலம் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. இந்த சிலைகள் தஞ்சை, நாகை, நெல்லை, அரியலூர் மாவட்ட கோயில்களில் இருந்து திருடப்பட்டவையாகும். சென்னை கொண்டுவரப்பட்டுள்ள 10  சிலைகளும் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. பின்னர் நீதிமன்றம் மூலம் அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.