ஆம்னி பேருந்துகளில் 2 முதல் 3 மடங்கு வரை கட்டண உயர்வு...அதிர்ச்சியில் பயணிகள்!

ஆம்னி பேருந்துகளில் 2 முதல் 3 மடங்கு வரை  கட்டண உயர்வு...அதிர்ச்சியில் பயணிகள்!

தொடர் விடுமுறை எதிரொலியாக ஆம்னி பேருந்துகள் கட்டணம் 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

3 நாள் விடுமுறை:

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா வருகிற 15ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், சனி, ஞாயிற்று விடுமுறையும் சேர்ந்து வருகிறது. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் சென்னையில் தங்கி படித்து வரும் மாணவர்கள், வேலை பார்ப்போர் என பல்வேறு தரப்பினரும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். 

ஆம்னி பேருந்தின் கட்டணம் உயர்வு:

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கான ரயில்களில் டிக்கெட்  தீர்ந்து விட்டதனால், ஆம்னி பேருந்துகளில் பயணிக்க முடிவு செய்தவர்களுக்கு கட்டணம் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கட்டண உயர்வு:

ஆம்னி பேருந்துகளில் அதிகபட்சமாக 800 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்ட சென்னை - திருச்சி மார்க்கத்தில், தற்போது 2 ஆயிரத்து 300 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதேபோல், சென்னை - கோவைக்கு ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது 4 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

மதுரை மற்றும் நெல்லைக்கு ஆயிரத்து 400 ரூபாய் வரையிலான டிக்கெட் கட்டணம், தற்போது 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஆன்லைன் இணையதளம் ஒன்றில் ஓசூரில் இருந்து கோவில்பட்டிக்கு 4 ஆயிரம் வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை:

இதனிடையே, கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், தொடர் 3 நாள் விடுமுறை எதிரொலியாக அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.