மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சிக்கு 27% இடஒதுக்கீடு: மத்திய அரசு ஒப்புதல்...

மருத்துவப் படிப்புகளில் இந்தாண்டு முதல் இதர பிறப்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சிக்கு 27% இடஒதுக்கீடு: மத்திய அரசு ஒப்புதல்...
மாநிலங்கள் மருத்துவப் படிப்புகளில், இளநிலை படிப்புகளுக்கு மொத்தமுள்ள இடங்களில் 15 சதவீதத்தையும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 சதவீதத்தையும் மத்தியத் தொகுப்புக்கு வழங்குகின்றன. இந்த இடங்களுக்கு மாணவர்களை நிரப்பும் போது, பட்டியலினத்தை தவிர, மற்ற பிரிவினருக்கான இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாமல் இருந்தது. 
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் இந்த விவாகரம் தொடர்பாக மத்திய அரசிடமும் தொடர்ந்து முறையிடப்பட்டு வந்தது.  இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சுகாதாரத்துறை கலந்தாய்வுக் கூட்டத்தில், இதைசுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, விரைவில் நடவடிக்கை எடுக்கவும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டார். 
 
இந்நிலையில் நடப்பாண்டு முதல், மாநிலங்களால் மத்தியத் தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 
இதன்மூலம் 5 ஆயிரத்து 550 மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.