ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 35 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!!

சுகாதாரத்துறையில் நீண்ட காலமாக கோலோச்சிய ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 35 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணிஇடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 35 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!!

தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலாளராக ராதாகிருஷ்ணன் பல ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

அதிமுக ஆட்சியில் அவரது இடத்தில் பியூலா ராஜேஷ் பணியமர்த்தப்பட்ட நிலையில், சிறிது காலத்திற்கு பிறகு மீண்டும் ராதாகிருஷ்ணனே அப்பொறுப்பினை ஏற்றார். இதைத்தொடர்ந்து திமுக ஆட்சியிலும் சுகாதாரத்துறை செயலராக ராதாகிருஷ்ணனே நீடித்தார்.

இதனிடையே மக்கள் பணியில் தீவிர கவனம் செலுத்தி வரும் ராதாகிருஷ்ணனுக்கு பணிமாற்றம் வழங்கப்படலாம் என்றும், புரோமோஷன் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன.

இந்தநிலையில் அவர் உள்பட 35 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சுகாதாரத்துறை முதன்மை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் வகித்த பொறுப்பில் பி. செந்தில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலராக இருந்த நசிமுதின், தொழிலாளர் நலன் துறையின் கூடுதல் தலைமை செயலராக பணி அமர்த்தப்பட்டுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த பிரதீப் யாதவ் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுக துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், அப்பொறுப்பில் தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதவிர  உள்துறை கூடுதல் செயலராக பணீந்திர ரெட்டியும், வருவாய் நிர்வாக ஆணையராக பிரபாகரும், தமிழ்நாடு தேர்தல் ஆணைய செயலராக விவேகானந்தனும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும்  திருச்சி, தர்மபுரி தென்காசி ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு  மாவட்ட ஆட்சியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.