கடன் பெற்று தருவதாக ரூ.1.40 கோடி மோசடி; 4 பேர் கைது!

ரூ.70 கோடி கடன் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து ரூ.1.40 கோடி மோசடி செய்த 1 பெண் உட்பட 4 நபர்கள் கைது. ரொக்கம் ரூ.1.01 கோடி மற்றும் 2 Fortuner கார்கள் மீட்பு.

ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிந்தர் பால் சிங் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரில், தான் M/s Pal Aqua என்ற நிறுவனத்தை ஹரியானா மாநிலத்தில் நடத்தி வருவதாகவும், அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நிதி உதவி தேவைப்பட்டதாகவும், அப்போது தனது நண்பர் மூலம் ராஜசேகர் என்கிற S.R.தேவர் என்பவர் தெரியவந்ததாகவும். அவர் ரூ.70 கோடி கடன் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்து அவரது கூட்டாளிகள் ரஜிதா மிர்ணல்சன் என்கிற ரேஷ்மின், ராமு மற்றும் தசரதன் ஆகியோர்களை அறிமுகம் செய்து வைத்ததாகவும், அவர்கள் சிங்கப்பூர் நிதி நிறுவனம் மூலம் குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாகவும், அதற்கு 2 % தபால் முத்திரை மற்றும் பதிவு கட்டணத்தை முன் கூட்டியே செலுத்த வேண்டும் எனக் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் வார்த்தைகளை நம்பி, தான் ரூ.1. 40 கோடி ரொக்கமாகக் கொடுத்ததாகவும், அதற்கு மேற்படி நபர்கள் போலியாக ரூ.70 கோடிக்கான வரைவோலையைக் காட்டி, அக்கடன்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனக் கூறியதாகவும், ஆனால், அவர்கள் வாக்குறுதி அளித்தபடி கடன் தொகையைப் பெற்றுத் தராமலும், கொடுத்த பணத்தைத் திருப்பித் தராமலும் ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மத்தியக் குற்றப் பிரிவின் ஆவண மோசடி பிரிவு-II ல் (EDF-II) வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஆவண மோசடி பிரிவு - II, உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படையினர், 12.10.2023 அன்று, ராஜசேகர்  ரஜிதா மெர்னல்சன், ராமு, தசரதன் ஆகியோர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் ரொக்கம் ரூ.1.1 கோடி, 2 Fortuner கார்கள், 2 செல்போன்கள், போலி முத்திரைத்தாள் மற்றும் முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மேற்படி 4 எதிரிகளும் இன்று (13.10.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிக்க: சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுவதை நேரில் ஆய்வு செய்யப்போவதாக நீதிபதிகள் அறிவிப்பு!