பெற்றோர்கள் திட்டியதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 4 மாணவிகள்...!

சேலத்தில் விடுமுறை நாட்களில் வீட்டிற்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றிய மாணவிகளை பெற்றோர்கள் திட்டியதால் மனமுடைந்த 4 மாணவிகள் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

பெற்றோர்கள் திட்டியதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 4 மாணவிகள்...!

சேலம் மாவட்டம் வாழப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவிகளான சௌந்தர்யா, ரமணி, புஷ்பா, ஜோதிகா ஆகிய நால்வரும், புதுப்பாளையம் அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்கள் விடுமுறை என்பதால் மாணவிகள் அவரவர் வீட்டுக்கு செல்வதாக விடுதி வார்டனிடம் தெரிவித்துவிட்டு, வீட்டுக்கு செல்லாமல் தனது நண்பர்கள் வீட்டுக்கு சென்றுள்ளனர். மேலும் அவர்கள் நேற்று பள்ளிக்குச் செல்லாமல் கோயிலுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் பெற்றோர்களுக்கு தெரியவந்ததால், மாணவிகளை அவர்களது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். 

இதனால் மனமுடைந்த நான்கு மாணவிகளும் எலி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து உடனடியாக மாணவிகள் 4 பேருக்கும் வாழப்பாடி அரசு மருத்துவமனையில்,  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் மாணவிகள் தற்கொலை முயற்சி  குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகளை நேரில் சந்தித்து மாணவிகளுக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம், பெற்றோர்களுக்கு தெரியாமல் மாணவிகள் நண்பர்களின் வீட்டிற்கும், கோவிலுக்கும் சென்றுள்ளனர். இதனால் பெற்றோர்கள் திட்டியதால் மாணவிகள் பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மாணவிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவிகள் நன்றாக உள்ளனர். தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.