நகை திருட்டில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது...!

குற்றால அருவியில் குளிக்கும் பெண்களிடம் நகை திருடிய மதுரையை சேர்ந்த 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

நகை திருட்டில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது...!

குற்றால அருவி சீசன் : 

தென்காசி மாவட்டம், சுற்றுலா தலமான குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி வரும் நிலையில் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவிகளில் குளிப்பதற்கு மக்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு குளிப்பதால் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நகைத்திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொள்ளை சம்பவம் : 

இதேபோல் பழைய குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் போது பெண்கள்  கழுத்தில் அணிந்துள்ள தங்க நகைகள் அடிக்கடி திருடு போனது. இந்த நிலையில் அருவியில் குளித்துக் கொண்டு இருந்தபோது தங்கச் சங்கிலியை பறித்து சென்றதாக  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முருகேஸ்வரி என்ற பெண் புகார் அளித்தார்.  

கைதானவர்கள் : 

இந்த புகாரின் பேரில் குற்றாலம் காவல் ஆய்வாளர்  அலெக்ஸ்ராஜ்  தலைமையிலான காவல்துறையினர் உடனடியாக  விசாரணை மேற்கொண்டு அருவியில் குளிப்பது போல் நடித்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த லதா (33), சுமித்ரா (28), ரத்னா (30), லட்சுமி (35) ஆகிய நான்கு பெண்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகை மீட்கப்பட்டது. பின்னர் அந்த 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

காவல்துறை விழிப்புணர்வு : 

இந்த தொடர் செயின் பறிப்பு சம்பவம் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு காவல்துறையினர், "சுற்றுலா பயணிகள் அனைவரும் உங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது, உங்களது கடமையே. இதில் அலட்சியம் காட்டக்கூடாது. அருவிகளில் குளிப்பதற்கு முன்பு தங்க நகைகளை உடையுடன் சேர்த்து பின்(Pin) செய்து கொள்ள வேண்டும். முடிந்தவரை தங்க நகைகளை பத்திரமாக கழட்டி வைத்துவிட்டு குளிப்பது பாதுகாப்பானதாகும். உங்கள் குழந்தைகளை கடை வீதிகளில் பொருட்கள் வாங்க தனியாக அனுப்ப வேண்டாம். மேலும் எவரேனும், சந்தேக படும்படி உங்களுக்கு தெரிந்தால் தயங்காமல் காவல் துறையினரிடம் தெரிவிக்கலாம்." 
என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.