சுதந்திர தின விழா: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு..!

சுதந்திர தின விழா: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு..!

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.

சுதந்திர தின விழா: 

75-வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, 13 ,14, 15 ஆகிய நாட்களில் பொதுமக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் மூவர்ணக்கொடியை ஏற்றுமாறு  மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

தீவிரவாதிகள் சதி திட்டம்:

75 வது சுதந்திர தின விழாவை சீா்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவு துறை எச்சரிக்கை விடுத்தது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், ரயில், பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு:

மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் பிரதான நுழைவு வாயில் அருகே மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதிக்கப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய போலீசாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். காா் பாா்க்கிங் பகுதியிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாா்வையாளா் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாஸ் வழங்குவதிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.  கூடுதல் சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. பயணிகள், அவர்களின் உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. 

7 அடுக்கு பாதுகாப்பு:

உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சா்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் விமான நிலையம் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20-ம் தேதி நள்ளிரவு வரை பாதுகாப்பு நடைமுறையில் இருக்கும் என்றும், 13, 14, 15 ஆகிய தேதிகளில் 7 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்படும் என்றும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.