இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 55 மீனவர்களை விடுவிக்க முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தல்...!!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 55 மீனவர்களை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 55 மீனவர்களை விடுவிக்க முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தல்...!!!

நெடுந்தீவுக்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் சட்டவிரோதமாக மீன் பிடிப்பில் ஈடுபட்டதாக  ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக 6 படகுகளையும் கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், கைதான மீனவர்களை மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ஒரே நாளில் 50-க்கும் அதிகமான மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மீனவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து தமிழக அரசு சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மீனவர்களை விடுவிக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது...

இதனிடையே காலையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 43 பேரையும் இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களை டிசம்பர் 31ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு மத்திய அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.