9 மாவட்ட உள்ளாட்சி -நாளை முதல் கட்ட தேர்தல்…  

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை  நடைபெறும் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

9 மாவட்ட உள்ளாட்சி -நாளை முதல் கட்ட தேர்தல்…   

தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு  வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி  தேர்தல்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது.  மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வேட்பாளர்கள் பட்டியல்  மற்றும்  அவர்களுக்கான சின்னமும் கடந்த மாதம் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 9 மாவட்டங்களில் மொத்தமுள்ள  27 ஆயிரம்  உள்ளாட்சி பதவியிடங்களுக்கு 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் களத்தில் உள்ளனர்.

உள்ளாட்சி  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக  தங்கள் ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை  நடைபெறுவதால் அதற்கான பிரச்சாரம் நேற்று  மாலை 5 மணியுடன்  ஓய்ந்தது. 9 மாவட்டங்களில் 78 மாவட்ட கவுன்சிலர், 755 ஒன்றிய கவுன்சிலர், 1577 ஊராட்சி தலைவர் பதவிக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 12,252 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் நாளை  முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால், வெளியூரை சேர்ந்தவர்கள் அந்தந்த பஞ்சாயத்துகளில் இருந்து வெளியேற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.