விசிக தலைவர் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு...காரணம் என்ன?

விசிக தலைவர் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு...காரணம் என்ன?

விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் விசிக கட்சியினர் 9 நபர்கள் மீது வேளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த வேதா அருண் நாகராஜன் என்பவர், கடந்த 2011 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தை கட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். பின்னர் நந்தம்பாக்கம் காவல் நிலையம் சென்ற அவர், விசிக கட்சி அலுவலகத்திற்கு சென்ற போது, வீரப்பன் என்பவரும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தூண்டுதல் பெயரில் தன்னை தாக்கியதாக புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக புகாரானது வேளச்சேரி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர், இந்த புகார் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன், வீரப்பன் உள்ளிட்ட 9 நபர்கள் மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், அடித்துக் கொடுங்காயத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிக்க : 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை: ”25 ஆண்டுகளில் இந்தியாவை... ” பிரதமர் மோடி!

ஆனால், இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் இல்லை என்பதால் புகார்தாரர் அருண் வேதா நாகராஜன் உயர் நீதிமன்றத்தை நாடினார். தொடர்ந்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 10 ஆண்டுகளாக வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், மீண்டும் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டது. இதனிடையே, விசாரணையின்போது இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களோ மற்ற விவரங்களோ எதுவும் காவல் நிலையத்தில் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அதே புகாரின் அடிப்படையில் மீண்டும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். 

இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வேளச்சேரி காவல் நிலையத்தில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வி.சி.க தலைவர் திருமாவளவன் உட்பட ஒன்பது நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வேளச்சேரி போலீசார் தற்போது விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.