"பட்டுக்கோட்டையில் தென்னை நார் தொழிற்சாலை அமைக்கப்படும்" - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் விரைவில் தென்னை நார் தொழிற்சாலை அமைக்கப்படும் என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெவித்துள்ளார். 

தஞ்சையில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது
 “பட்டுக்கோட்டையில் தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். என்னுடைய கோரிக்கையும் அதுதான். தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக 4 நிறுவனங்களிடம் பேசி உள்ளோம். இதற்காக நில தேவைகள் அதிகமாக உள்ளது. நில எடுப்பு நடந்து முடிந்த பிறகு விரைவிலே தென்னை சார் தொழிற்சாலை அமைக்கப்படும். 

தஞ்சையில் ஐ.டி பார்க் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஐ.டி பார்க்க செயல்பாட்டுக்கு வந்ததும் டெல்டா மாவட்டங்களில் படித்த ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி சார்ந்த வேளாண் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

சிறு, குறு தொழில்கள் நலிவடையாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் தான் தொழில் தொடங்க ஏராளமானோர் முன் வருகின்றனர். முதலீடு அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் நடக்க உள்ள முதலீட்டாளர் மாநாட்டில் அதிக அளவில் முதலீடுகள் ஈர்க்கும் வகையில் இருக்கும்.

அவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். தமிழ்நாடு மட்டும்தான் சொன்னதை செய்கிறது. ஏற்கனவே தொழில் தொடங்கியவர்கள் மீண்டும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன் வருகின்றனர்” என்றார்.  தொடர்ந்து, தஞ்சையில் அமைக்கப்பட்டு வரும் மினி டைட்டில் பார்க் கட்டிட பணியை ஆய்வு செய்தார்.

அண்ணாமலை பாதயாத்திரை குறித்து கேட்டதற்கு:-

விளையாட்டு செய்திக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல இயலாது என காமெடியாக தெரிவித்தார்.