உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் எதற்கு சிறப்பு கூட்டம்? - ஈபிஎஸ்

முதலமைச்சர் வேந்தராகும் மசோதா தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர்களுக்கும் இடையே பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. 

பேரவையில் பேசிய எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் உச்சநீதிமன்றத்தை அரசு நாடியுள்ளது என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் ஏன் சிறப்பு கூட்டத்தை கூட்டவேண்டும் எனவும் கேள்வியெழுப்பினார். 

வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்தால் சிறப்பு கூட்டம் கூட்டுவதற்கு அவசியம் இல்லாமல் போய்விடும், அதற்குள் அவசர அவசரமாக சிறப்பு கூட்டத்தை கூட்டியது மக்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது என்றும் அவர் வினவினார்

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முதலமைச்சர் வேந்தராகும் மசோதாவை திமுக எதிர்த்ததாக கூறிய எடப்பாடி பழனிசாமி, இப்போது மட்டும் முதலமைச்சரை பல்கலைக்கழக வேந்தராக்க வேண்டும் என திமுக கூறுவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க : ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர்... !

இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்களையும் சேர்த்து தான் தற்போது சட்டப்பேரவையை திமுக அரசு கூட்டி இருப்பதாகவும் தெரிவித்தார்.

மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டுமென பேரவையில் வலியுறுத்திய எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டத்துறை அமைச்சகம் தீர ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் போது அரசு சார்பில் உரிய வாதம் முன் வைக்கப்படும் என்றும், மாநில சுயாட்சி குறித்து எதிர்கட்சித் தலைவருக்கு அச்சம் தேவையில்லை எனவும் பதிலளித்தார்.

காரசார விவாதத்திற்கு பின்னர் மசோதாவுக்கு ஆதரவு என்றபோதும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் இருந்த மீன்வள பல்கலை பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.