தாயில்லா ஆட்டுக்குட்டியை அரவணைத்த நாய்... தாயாக மாறி பால் கொடுக்கும் அதிசயம்...

கோவில்பட்டி அருகே தாயில்லா ஆட்டுக்குட்டிக்கு தாயாக நாய் பால் கொடுக்கும் ஆட்டுக்குட்டி.

தாயில்லா ஆட்டுக்குட்டியை அரவணைத்த நாய்... தாயாக மாறி பால் கொடுக்கும் அதிசயம்...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டி கணேஷ் நகரைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி. கட்டட வேலைகளை கான்ட்ராக்ட் எடுத்து செய்து வரும் இவர், தனது வீட்டில் கிட்டியம்மாள் என்ற  பெண் நாய் ஒன்றை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்.

வீட்டில் உள்ள ஒரு நபர் போல தான் கிட்டியம்மாளை பெருமாள்சாமி குடும்பத்தினர் வளர்த்த வந்த காரணத்தினால் வீட்டில் உள்ளவர்களிடம் கிட்டியம்மாள் பாசத்துடன் பழகி வருகிறது. கருவுற்று இருந்த கிட்டியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன் 6 குட்டிகளை ஈன்றுள்ளது. பெருமாள், அந்த 6 குட்டிகளையும் தனது நண்பர்களுக்கு கொடுத்துவிட்டார்.

இதற்கிடையில் தென்காசி அருகேயுள்ள மேலப்பாவூரில் உள்ள பெருமாள்சாமியின் மூத்த மகள் இலக்கியா வீட்டில் உள்ள ஆடு ஒன்று, 4 குட்டிகளை ஈன்றுள்ளது.அதில் ஒரு குட்டியை இலக்கியா, தனது தந்தை பெருமாள்சாமியிடம் கொடுத்துள்ளார். பெருமாள்சாமி தனது வீட்டில் வைத்து அந்த ஆட்டுக்குட்டியை வளர்த்து வருகிறார். அந்த ஆட்டுக்குட்டிக்கு கருப்பாயி என்று பெயர் வைத்துள்ளார்.

இந்நிலையில், அந்த ஆட்டுக்குட்டி வீட்டிற்கு வந்ததும் கிட்டியம்மாளுடன், நல்ல பழகி வந்தது மட்டுமின்றி, எப்போதும் இருவரும் ஒன்றாக தாய், மகள் போல இருந்துள்ளது மட்டுமின்றி, ஆட்டுக்குட்டிக்கு பசி எடுத்தும்  நாய் (கிட்டியம்மாள்) பால் கொடுத்து வருவதைப் பார்த்த பெருமாள்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆச்சரியப்பட்டனர்.

தாயில்லாத ஆட்டுக்குட்டியை தனது பிள்ளையாக நினைத்து பால் கொடுத்து வரும் நாயை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். இது குறித்த செய்தி பரவியதும் அப்பகுதியில் உள்ள மக்கள் நாய் ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுப்பதை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். ஆட்டுக்குட்டி எப்பொழுது பால் குடித்தாலும் மனம் கோணமால் நின்று நிதனமாக நாய் பால் கொடுத்து வருகிறது.

இதுகுறித்து பெருமாள்சாமி கூறுகையில்,  எங்கள் வீட்டில் உள்ள நாயும், ஆட்டுக்குட்டியும் எப்போதும் விளையாடிக் கொண்டே இருக்கும். அதைப் பார்க்கும் போதெல்லாம் தாயும், மகனும் பழகுவது போல் தான் தோன்றும். இந்நிலையில், ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுத்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் நாங்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனோம். 

தாயில்லாத ஆட்டுக்குட்டியை தத்தெடுத்து நாய் பால் கொடுத்து கவனித்து, பராமரித்து வருகிறது. இதைப் பார்த்த சந்தோஷத்தில், ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுக்கும் போது அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டோம். இதையறிந்த கிராம மக்கள் ஏராளமானோர் எங்கள் வீட்டிற்கு வந்து, நாயையும் ஆட்டுக்குட்டியையும் பார்த்து அதிசயித்து செல்கின்றனர். நாய் பால் கொடுப்பதால் ஆட்டுக்குட்டிக்கு வேறு எதுவும் பிரச்சினை எதுவும் வருமா என்று அச்சப்பட்டோம். இது குறித்து கால்நடை மருத்துவரிடம் கேட்ட போது பிரச்சினை எதுவும் இருக்காது என்று தெரிவித்தாகவும் கூறினார்.