தக்காளி, காய்கறி விலை உயர்வு...சீரான விலையை உறுதி செய்ய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!

தக்காளி, காய்கறி விலை உயர்வு...சீரான விலையை உறுதி செய்ய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!

தக்காளி மற்றும் காய்கறி விலையை குறைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

தமிழ்நாடு முழுவதும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதை கண்டித்து,  பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தக்காளி விலை 120 ரூபாய் அளவுக்கு உயர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதேபோல், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், சீரான விலையை உறுதி செய்யும் வகையில் தொலைநோக்கு திட்டம் தேவை என்று அரசுக்கு வலியுறுத்தி உள்ளார்.

பல ஏழைக் குடும்பங்களில் ஒரு நாள் உணவுக்கான தொகையை, காய்கறிகள் வாங்குவதற்காகவே செலவிட வேண்டியிருக்கிறது.  வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை தவிர்த்து விட்டு சமையல் செய்வது என்பதும் சாத்தியமில்லை. அதனால், ஏழை & நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை தமிழ்நாடு அரசு மொத்தமாக கொள்முதல்  செய்து தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் பல்பொருள் அங்காடிகளிலும், நியாயவிலைக் கடைகளிலும்  மலிவு விலையில் விற்க வேண்டும்.

இதையும் படிக்க : திமுக ஆட்சியில் கேட்பாரற்று கிடக்கும் அம்மா உணவகம்...குற்றம் சாட்டும் பன்னீர் செல்வம்!

தேவைப்பட்டால் சுய உதவிக் குழுக்கள், சிறு வணிகர்கள் மூலமாக  நடமாடும் காய்கறி கடைகளை அமைத்து அவற்றின் வழியாகவும், வெங்காயம் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை குறைந்த விலையில் விற்பனை செய்யலாம். அதன் மூலம் வெளிச் சந்தையிலும் காய்கறிகளின் விலைகளை கட்டுப்படுத்த முடியும் என்றும்,  அதனால் மக்கள் நிம்மதியடைவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, தக்காளி, சாம்பார் வெங்காயம் போன்றவற்றின் விலை உயர்வுக்கு காரணம் என்ன? என்பதையும் தமிழ்நாடு அரசு ஆராய வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.