அதிமுக மாநாடு : பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவு...!

அதிமுக மாநாடு :  பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவு...!

மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார், மதுரை வலையங்குளம் பகுதியில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அதில், "மதுரையில் ஆகஸ்டு 20ம்தேதி விமான நிலையம் அருகில் இருக்கக்கூடிய வலையங்குளம் பகுதியில் அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டிற்கு ஏற்கனவே சில பொதுவான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான பொதுமக்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் மாநாட்டிற்கு வரும் நிர்வாகிகள் மற்றும் பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், மாநாட்டு பகுதியில் போக்குவரத்து சீர் செய்யவும், மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு நிறுத்த தேவையான இடவசதிகள் ஏற்படுத்த கோரி மதுரை மாநகர துணை காவல் கண்காணிப்பாளரிடம் புதிய மனு அளிக்கப்பட்டது. 

எனவே, மதுரை வலையங்குளம் பகுதியில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி,  “ ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையிலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் உறுதிபடுத்த வேண்டும்”,  என கூறி வழக்கை முடித்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க   |  ”போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படும்” தமிழக அரசு விளக்கம்!