அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்.!!

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்.!!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி செய்து விட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டன.

இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு விசாரணைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக தனிப்படையினர் அவரை கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் காரில் தப்பிச் செல்ல முயன்ற போது மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின் மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி-க்கு உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய 4 வார காலத்துக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

இது குறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில், ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், வெளியூர் செல்லக்கூடாது, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் போன்ற நிபந்தனைகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.