"ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி" இபிஎஸ் குற்றச்சாட்டு!

"ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி" இபிஎஸ் குற்றச்சாட்டு!

தேசிய அளவிலான தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு பாஜகவும், தமிழ்நாட்டில் அதிமுகவும் தலைமையேற்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து இன்று காலை சென்னை திரும்புவதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயக் கூட்டணியில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்று பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான மரியாதை அளிக்கப்படுவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் என்றும், இதனால் ஊழல் குறித்து பேசுவதற்கு திமுகவிற்கு தகுதியில்லை என்றும் கூறினார்.

அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக, என் மீது  திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த  நீதியரசர் கடும் கண்டனத்தை தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்ததாகவும், இது நீதிக்கு கிடைத்த தீர்ப்பு  என்றும் கூறினார்.

இதையும் படிக்க : பட்டியலின பிரிவுகளின் தேசிய ஆணைய தலைவர் திடீர் ராஜினாமா!

தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டம் குறித்து பேசிய அவர், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறை சென்றவர்கள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளதாகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றி பெறும் என்றும் கூறினார்.

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் அதிமுக அரசு நடவடிக்கை எடுத்ததாகவும், கொலைக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடியது திமுக தான் என்றும் சாடினார்.