சசிகலாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் அதிமுக  புகார்...

அதிமுக கொடியையும், பொதுச்செயலாளர் பெயரையும் பயன்படுத்தி, கட்சியில் சலசலப்பை ஏற்படுத்த சசிகலா முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

சசிகலாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் அதிமுக  புகார்...

கடந்த 17 ஆம் தேதி எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து  சசிகலா மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றினார். அங்கிருந்த கல்வெட்டில்,  அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்று பொறிக்கப்பட்டிருந்ததால் எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  

இந்த நிலையில், சசிகலாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் அதிமுக  புகார் அளித்துள்ளது. சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில்  அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல், விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ரவி உள்ளிட்டோர் புகார் மனுவை அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுக தொண்டர்களிடையே ஒருவிதமான குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சசிகலா தவறான எண்ணத்தில் செயல்பட்டு வருவதாகவும், கட்சியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தவே சசிகலா இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார்.