9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்த அதிமுக எதிர்ப்பு...

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்த அதிமுக எதிர்ப்பு...

விழுப்புரம் காஞ்சிபுரம் உள்ளிட்ட  9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, மனு தாக்கல் நடந்து வரும் நிலையில் 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாகத் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியான அதிமுக  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலே ஒரே கட்டமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்துவது கள்ள ஓட்டுப் போடுவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாக அமையும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், தற்போது 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதால் மீண்டும் வன்முறை வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவும்,எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை மனுவை மாநிலத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்குமாறும், தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறத் தகுந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என  கூறப்படுகிறது.