ஆடி அமாவாசை.. தமிழக முழுவதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடி வழிபாடு!!

ஆடி அமாவாசையை முன்னிட்டு, தமிழக முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

ஆடி அமாவாசை.. தமிழக முழுவதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடி வழிபாடு!!

ஆடி அமாவாசை நாட்களில் புனித நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாட்டால் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, பாபநாசம் தாமிரபரணி நதியில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

இதேபோல், மயிலாடுதுறையில்  உள்ள காவிரி ஆற்றில் ஆடி அமாவாசையை முன்னிட்டு  ஏராளமான பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து காவிரியில் அதிக அளவு தண்ணீர் செல்வதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் புனித நீராடினர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் காவிரி படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களின் பெயரைகூறி, பச்சரிசிமாவு, எள், உள்பட பல்வேறு பொருட்களை படையலிட்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, தர்ப்பண பொருட்களை ஆற்றில் கரைத்து, புனித நீராடி வழிபட்டனர்.

ஒகேனகலில் அரவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், தடையை மீறி பொதுமக்கள் ஒகேனகல் அருகே படையல் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

இதேபோல, ஆடி அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில், விநாயகர், ஈஸ்வரன், உள்ளிட்ட பல்வேறு சுவாமிகள் உற்சவமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு கடல் தீர்த்தவாரி செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.