ஆவின் பால் பொருள்கள் விலை உயர்வு: அண்ணாமலை கண்டனம்...!

தமிழ்நாட்டில் ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது,

மக்கள் விரோத திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கடுமையான விலையுயர்வை மக்கள் தலையில் சுமத்துவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசு நிறுவனமான ஆவின் பால் பொருள்கள் விலையை, மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தி பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 
 
ஆவின் நெய் விலை லிட்டருக்கு ₹70 முதல் ₹100 வரை அதிகமாகவும், வெண்ணெய் விலை கிலோவுக்கு ₹30 முதல் ₹50 வரையிலும் உயர்த்தி, சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு இன்று (14.09.2023) முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் பொருள்களின் இந்த விலையுயர்வு, தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான்  இருக்கும்.
 
கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி, பால் கொள்முதல் விலையை ₹3 மட்டும் உயர்த்திவிட்டு, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளில் பால் பொருள்கள் விலையை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது திமுக அரசு. பால் உற்பத்தியாளர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காமல், ஆவின் நிறுவன பால் பொருள்கள் விற்பனை விலையை மட்டும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியிருப்பது, தனியார் பால் நிறுவனங்களை வளர்க்க, ஆவின் நிறுவனத்தையே அழித்து விட வேண்டும் என்று திமுக முடிவு செய்துள்ளதாகத்தான் தெரிகிறது.
 
இன்னும் சில நாட்களில், தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள்,  வரவிருக்கின்றன. பால் பொருள்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஆவின் பால் பொருள்கள் விலையை உயர்த்தியிருப்பது, தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகத்தான் அமையும்.
 
உடனடியாக, பொதுமக்களைப் பாதிக்கும் இந்த விலையுயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், ஆவின் பால் நிறுவனத்தை முடக்கும் முயற்சிகளை, மக்கள் விரோத திமுக அரசு கைவிட வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.” 
இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.