அதானி துறைமுக விரிவாக்க பணிகளை கைவிடுக - மத்திய அரசுக்கு தமிழக எம்.பிக்கள் வலியுறுத்தல்!!

திருவள்ளுர் மாவட்டம் காட்டுப்பள்ளியில்  செயல்படும் அதானி துறைமுகத்தின் விரிவாக திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதானி துறைமுக விரிவாக்க பணிகளை கைவிடுக - மத்திய அரசுக்கு தமிழக எம்.பிக்கள் வலியுறுத்தல்!!

நாடாளுமன்ற மக்களவையில் துறைமுகம் சார்ந்த பணிகள் குறித்து இன்று  விவாதம் நடைபெற்றது.

இதில் பேசிய வடசென்னை திமுக எம்.பி கலாநிதி வீராசாமி, அரசு கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களை விட தனியார் துறைமுகங்களே அதிக லாபம் ஈட்டுவதாக குறை கூறினார். குறிப்பாக  திருவள்ளூர் காட்டுப்பள்ளியில்  உள்ள அதானி துறைமுகம் அதிக லாபம் ஈட்டுவதோடு,  விரிவாக்கத்திற்கான முயற்சியில் ஈடுபடுவதாகவும், இதனால் மீனவர்கள் மட்டுமல்லாது சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.  

இதனைத்தொடர்ந்து பேசிய திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியனும், உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 136 இடத்தில் பின்தங்கியிருப்பதாக குறிப்பிட்டார்.இதற்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவிப்பதே முக்கிய காரணம் என குற்றம்சாட்டினார்.

நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மீனவர்களின் நலனில் மத்திய அரசு அக்கறை காட்டாததாலேயே அதானி துறைமுக விரிவாக்கம் மற்றும் ராமன்துறையில் என்ஐஎம் துறைமுகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வழிமர்சித்தார். சூழலியல் நிலையை கருத்தில் கொண்டு அதானி விரிவாக்க திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். 

முன்னதாக பேசிய திருவள்ளூர் தொகுதி எம்.பி ஜெயக்குமார்,  அரசு துறைமுகங்கள் இருக்கும்போது தனியார் துறைமுகமான அதானிக்கு  மத்திய அரசு ஏன் ஊக்குவிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். மேலும் இந்த துறைமுகம் விதிகளை மீறி விரிவாக்க பணிகளில் ஈடுபடுவதாகவும், இதனால் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.