மாடுகள் குறுக்கே ஓடியதால் விபத்து... 2 மாடுகள் பலி - காரில் சென்ற இருவர் படுகாயம்...

சீர்காழி புறவழிச்சாலையில் மாடுகள் குறுக்கே ஓடியதால் ஏற்பட்ட விபத்தில் 2 மாடுகள் பலி.

மாடுகள் குறுக்கே ஓடியதால் விபத்து... 2 மாடுகள் பலி - காரில் சென்ற இருவர் படுகாயம்...

மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை கோழிகுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (51) என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் திருப்பதி சென்று விட்டு இன்று காலை திரும்பியுள்ளார். வழியில் சீர்காழி புறவழிச்சாலையில்  கார் வந்து கொண்டிருந்தபோது ரோட்டில் சுற்றி திரிந்த மாடுகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடி உள்ளது. இதனை சற்றும் எதிர்பார்க்காத நிலையில் கார் மாடுகள் மீது மோதியதில் இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாயின.

காரில் சென்ற சுவாமிநாதன் மற்றும் அவரது தாயார் பானுமதி (70) இருவரும் காயமடைந்தனர். இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

சீர்காழி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் வீட்டில் வைத்து வளர்க்காமல் சாலையில் விட்டு விடுகின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது சுவாமிநாதன் சென்ற கார் விபத்துக்குள்ளாகி மாடுகள் பலியாகியுள்ளன. இருவர் காயமடைந்துள்ளனர். இதுபோன்ற விபத்துக்களை தடுக்க நகராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகள் சாலையில் மாடுகளை விடுவதை தடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.