சட்டப் போராட்டம் மூலம் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்....அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் மாணவர்கள் நலன் கருதி சட்டப் போராட்டம் மூலம் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சட்டப் போராட்டம் மூலம் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்....அமைச்சர் அன்பில் மகேஷ்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்,

தமிழகம் முழுவதும் 600 நாட்களுக்கு பிறகு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வந்துள்ளனர் என்றும் தற்போது குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் வந்திருந்தாலும் மகிழ்ச்சியுடன் பாடங்களை கவனித்து வருகின்றனர். சுழற்சி முறையில் பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

நீட் தேர்வு பயத்தில் மாணவன் தற்கொலை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது நீட் தேர்வு தமிழகத்தில் வராமல் இருப்பதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தமிழகத்தில் சட்டப்போராட்டம் நடத்தி நீட் தேர்வு ரத்து செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார். எனவே மாணவர்கள் தயவு செய்து தற்கொலை செய்யும் எண்ணத்தை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கூறிய அவர், மாணவர்கள் எதிர்காலம் எவ்வளவு முக்கியமோ, அதை விட மாணவர்களின் உடல் நலம் முக்கியம் என்பதை உணர்ந்து அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்