ஆட்சி மாற்றம் வெறும் காட்சி மாற்றமாக இல்லை... தி.மு.க. அரசுக்கு நடிகர் ஆரி பாராட்டு...

அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக 1 லட்ச ரூபாய் வழங்குவதாக, நடிகர் ஆரி அறிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றம் வெறும் காட்சி மாற்றமாக இல்லை... தி.மு.க. அரசுக்கு நடிகர் ஆரி பாராட்டு...

அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட உள்ள தமிழ் இருக்கைக்கான தகவல்கள் அடங்கிய தமிழ் மொழி செயலியை, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். வி.ஜி.பி. உலக தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வி.ஜி.பி. குழும தலைவர் வி.ஜி. சந்தோசம் தலைமையேற்க, நடிகர் ஆரி, வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் தலைவர் கால்டுவெல் வேல்நம்பி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆரி, ஆட்சி மாற்றம் வெறும் காட்சி மாற்றமாக இல்லை என்றும், தமிழருக்கான ஆட்சி என்பதை ஒவ்வொரு நொடியும் நிரூபிக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார். தமிழ் மொழி படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை என்ற அறிவிப்பு மூலம் தாய்மொழி கல்வியின் முக்கியத்துவத்தை தி.மு.க. ஆட்சி முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான தமிழ் செயலி ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளதாக கூறியுள்ளார். தாய்மொழி தமிழை தாயாக பாவித்து, வாழ்த்து பாடல் பாடும் போது எழுந்து நிற்பது நமது பண்பாடு என்றும், தமிழ் தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்பது தமிழுக்கு செய்யும் மரியாதை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.