அய்யோ டுவிட்டர், பேஸ்புக் -னா என்னனே தெரியாது... காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் புகார்

ட்விட்டரில் தனது பெயரில் போலியான கணக்கை துவங்கி, உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பதிவிட்டு வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரபல காமெடி நடிகர் செந்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அய்யோ டுவிட்டர், பேஸ்புக் -னா என்னனே தெரியாது...  காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் செந்தில்  புகார்

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த திரைப்பட காமெடி நடிகர் செந்தில், தனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு துவங்கியுள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்கோரி புகார் மனுவை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் செந்தில், தனக்கு ட்விட்டர், முகநூல் கணக்கு பற்றியெல்லாம் எதுவும் தெரியாது எனவும், தான் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை எனவும் தெரிவித்தார்.

தனது நண்பர்கள் மூலம் தனது பெயரில் விஷக் கிருமிகள் யாரோ போலியான கணக்கை ட்விட்டரில் துவங்கியுள்ளதை அறிந்ததாகவும், டாஸ்மாக் திறப்புக்கு தான் எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் டாஸ்மாக்குகளை மூடக் கோரிக்கு வைத்ததுபோல் அந்த ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தானுண்டு தனது வேலை உண்டு எனச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் இதுபோன்று சில விஷக் கிருமிகள் செய்யும் வேலைகள் மனவுளைச்சலை தருவதாக கூறிய அவர், போலி கணக்கு தொடர்பாக சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் போலி கணக்கை நீக்கம் செய்யக்கோரி சைபர் கிரைம் போலீசார் மூலம் ட்விட்டர் நிறுவனத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.