ஆதி திராவிடர் மாணவர் நல விடுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத அவலம் ..!

ஆதி திராவிடர்  மாணவர் நல விடுதியில்  குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத அவலம் ..!

நாகையில் ஆதி திராவிடர் நல மாணவர் நல விடுதியில் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் அறிவுறுத்தினர்.  

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவினர்
பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவருமான வேல்முருகன் தலைமையில் நாகை  கோட்டைவாசல்படி செக்கடி  தெருவில் உள்ள ஆதிதிராவிட நல அரசினர் மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது விடுதியில் இருந்த  மாணவர்கள் மின்விசிறி ஓடும் ஆனால் காற்று வராது, கழிவறை உள்ளது ஆனால் கதவுகள் இல்லை, கழிவறை சுத்தம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டதால் துற்நாற்றம் வீசுகிறது, குடிநீர் ஒரே உப்பு என ஆய்வு குழுவிடம் அடுக்கடுக்கான புகார்களை முன் வைத்தனர். புகார்களை கேட்ட என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் கதவுகள் இல்லாத கழிவறையை சென்று பார்த்து முகம் சுளித்து வெளியில் வந்தார்.

பின்னர் மாணவர்களின் படுக்கை அறைக்கு சென்று அங்குள்ள பாய் மற்றும் தலையணைகளை பார்த்து எதிர்கால தலைமுறையினர் தலையணை, படுக்கும் பாய் இப்படி இருந்தால் எப்படி படிப்பார்கள் என அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார். பின்னர் விடுதி முழுவதும் ஆய்வு செய்த அவர்  மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜமூனாராணி மற்றும் விடுதி காப்பாளர் ஆகியோரை அழைத்து எதிர்கால தலைமுறையினர் தங்கும் விடுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஒரு வார காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டும். அடிப்படை வசதிகளை செய்து முடித்த பின்னர் அதன் புகைப்படங்களை அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதன்பின்னர் விடுதிக்கு தேவையான சுற்றுச்சுவர் மற்றும் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.  ஆய்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவில் சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி, சக்கரபாணி, பழனியாண்டி, மோகன், ராமலிங்கம், ஜெயக்குமார் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிக்க   |  பேருந்து வசதி இன்றி தவித்து வந்த கிராமம்: பேருந்து ஏற்பாடு செய்து தந்த எம். எல். ஏ -க்கு மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி.