மீண்டும் நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்...

தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மீண்டும் நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்...

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு அனுப்பி வைத்த நீட் விலக்கு மசோதாவை 142 நாட்களுக்கு பின் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். அதையடுத்து நீட் விலக்கு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, இன்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்றது. 

இதில் ஆளுநர் கடிதம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது.  அப்போது, நீட் தேர்வு குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்து பற்றி பேச அனுமதிக்கவில்லை என கூறி, பாஜக எம்.எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.  

ஆனால், நீட் தேர்வு மாணவர்களுக்கு பாதகம் என்ற கருத்தை முன்வைத்த அதிமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள்,  நீட் விலக்கு சட்டமுன்முடிவுக்கு ஆதரவு அளித்தனர். அதனைத்தொடர்ந்து பேசிய முதல்வரும் நீட் தேர்வு ஒரு பலிபீடம் என விமர்சன கருத்தினை முன்வைத்தார். சட்டமுன்வடிவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்க ஆதரவும் தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, நீட் விலக்குக்கு எதிரான சட்டமுன்வடிவு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் இந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கூறி, பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.