டெல்லி செல்கிறது அனைத்துக்கட்சிக் குழு... மேகதாது அணை விவகாரம்...  பிரதமரிடம் கோரிக்கை அளிக்கிறார்கள்...

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, பிரதமரை சந்திப்பதற்காக தமிழகத்தின் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு இன்று டெல்லி செல்கிறது.

டெல்லி செல்கிறது அனைத்துக்கட்சிக் குழு... மேகதாது அணை விவகாரம்...  பிரதமரிடம் கோரிக்கை அளிக்கிறார்கள்...

கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க கடந்த 12 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சட்டசபை கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்படுகை மாநிலங்களிடம் அனுமதி பெறாமல், மேகதாதுவில் எந்த கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், கர்நாடக அரசின் திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கூட்டத்தின் தீர்மானங்களை அனைத்து கட்சியினரும் டெல்லி சென்று, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரிடம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், இன்று டெல்லி செல்லும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு, நாளை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோரை சந்தித்து, மேகதாது விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து, மனு அளிக்க உள்ளனர்.