தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் கிடைக்கும்... முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி உறுதி...

சென்னையில் கனமழை பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் கிடைக்கும்... முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி உறுதி...

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், வாகனங்கள் மழை நீரில் ஊர்ந்து செல்கின்றன.

இந்நிலையில், சென்னையில் ஏற்பட்ட மழை பாதிப்பு குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி கேட்டறிந்தார். சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதாரங்கள் குறித்து பிரதமர் மோடி கேட்டு தெரிந்து கொண்டார். 

அப்போது, கொரோனா நிவாரண பணிகள் மற்றும் இதுவரை ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு மாநில பேரிடர் நிதி செலவழிந்து விட்டதாகவும், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்ய போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் எனவும், பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இதனையடுத்து, மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்துள்ள பிரதமர் மோடி, அனைவரின் நலம் மற்றும் பாதுகாப்புக்காக தாம் பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.