பிரியாவின் உயிருக்கு இவை அனைத்தும் ஈடாகாது.... நேரில் சென்று பணியாணை வழங்கிய பின் முதலமைச்சர் உருக்கமான ட்வீட்

பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும்

பிரியாவின் உயிருக்கு இவை அனைத்தும் ஈடாகாது.... நேரில் சென்று பணியாணை வழங்கிய பின் முதலமைச்சர் உருக்கமான ட்வீட்

தவறான சிகிச்சை - உயிரிழந்த மாணவி 

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கால்பந்தாட்ட வீராங்கனையான மாணவி பிரியா(17). கால்பந்தாட்டத்தின் போது இவரது காலில் ஜவ்வு கிழிந்ததையடுத்து பெரியார் நகர் அரசு மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் சோமசுந்தரம் மற்றும் பால் ராம்சங்கர் இருவரும் தவறான கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்த நிலையில் எதிர்பாராதவிதமாக கடந்த நவ் 15ம் தேதி உயிரிழந்தார் பிரியா.

தலைமறைவான மருத்துவர்கள் 

பிரியா உயிரிழந்ததை அடுத்து தவறான சிகிச்சையளித்த மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம்சங்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாகி உள்ளனர். இது தொடர்பாக பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறிழைத்த மருத்துவர்கள் எங்கு தலைமறைவாக இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றார். பின்பு உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

Image

பிரியாவின் வீட்டில் முதலமைச்சர்

மருத்துவர்களின் கவனக்குறைவால் சென்னையில் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த பிரியாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர்.

மேலும் படிக்க: நாட்டுல நிஜமாவே ஜென்டில்மேன் கிச்சாக்கள் இருக்காங்க பா... தி ரியல் லைஃப் ஆக்சன் கிங்..!

பிரியாவின் குடும்பத்திற்கு ஏற்கவனே இழப்பீடாக ரூ.10 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் அறிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து மாணவியின் குடும்பம் உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாக தெரிய வந்த நிலையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அவர்களுக்கு வீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

Image

இந்நிலையில் அரசு வேலைக்கான பணி ஆணையையும், ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும் பிரியாவின் குடும்பத்திடம் நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார், உடன் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடன் இருந்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம். ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்திற்கும், நம் மாநில விளையாட்டுத்துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு.

Image

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் பிரியாவின் உயிருக்கு ஈடாகாது என்று பிரியாவின் குடும்பத்தை சந்தித்த பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

- அறிவுமதி அன்பரசன்