”அறிவியல் மற்றும் கணக்கு ஆசிரியர்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள்” - உதயநிதி

அறிவியல் மற்றும் கணக்கு ஆசிரியர்கள் PT வகுப்பை கடன் வாங்காதீர்கள் என ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். 

குழந்தைகள் தினத்தையொட்டி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து, இவ்விழாவில் தமிழ்நாட்டில் சிறந்த பள்ளிகள் மற்றும் போட்டிகளில் பரிசு வென்ற மாணவ மாணவியர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். முன்னதாக மாணவிகளின் மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தார். 

இதையும் படிக்க : குரூஸ் பர்னாந்தீஸ் திருவுருவச் சிலை திறப்பு...!

இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, அறிவியல் மற்றும் கணக்கு ஆசிரியர்கள் PT வகுப்பை கடன் வாங்காதீர்கள், முடிந்தால் உங்கள் வகுப்பு நேரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள் என ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசியவர், முதலமைச்சர் ஒவ்வொரு முறையும் மாணவர்களை சந்திக்கும் போதும் தெரிவிப்பது ஒன்று தான், படிப்பு தான் உங்களிடம் இருந்து பறிக்க முடியாத ஒரே சொத்து என்றும், உங்களை தாயாக தந்தையாக காக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது எனவும் கூறுவார் என உதயநிதி தெரிவித்தார்.